பல்லவர்கள் | மாமல்லபுரம் வராக மண்டபத்தின் சிம்மத் தூண்
கப்பல்கள் சூழ்ந்த அகலமான வளம் மிக்க கடலின் துறைமுகப் பகுதி, வானளவு உயரமான மாடங்கள் உள்ள மணற்பாங்கான தெருக்கள், இரவுப் பொழுதுகளில் அவ்வுயர் மாடங்களில் ஒளிரும் விளக்குகள், அவ்விளக்குகளின் ஒளியால் கரை வந்தடையும் கப்பல்களும் துறைமுகத்தை விடுத்து செல்லும் கப்பல்களுமென ஒழுங்குபட அமைத்த ஒரு துறை நகரின் வழி அதன் அன்றாடத்தைக் கடந்து வந்த பரிசில் பெற்ற பாணன் ஒருவன், நலித்தோள் வறுத்தும் தன்ணிணைப் பாணர்களைக் கச்சியைத் தலைநகராகக் கொண்டாளும் சோழன் இளந்திரையனிடம் பரிசில் பெற ஆற்றுப்படுத்தும் போது அவர்களுக்குப் போகும் வழி எவ்வாறு இருக்கப் போகிறது என்பதைப் புலப்படுத்துவதாக அமைவதே பத்துப்பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை. இந்நூல்கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் தொண்டைமான் இளந்திரையன் மேல் பாடப்பட்டது.
நீர்ப்பெயற்று எல்லைப் போகி பால்கெழ,
வால் உளைப் புரவியொடு வட வளம் தரூஉம்
நாவாய் சூழ்ந்த நளி நீர்ப் படப்பை,
மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின்,
பரதர் மலிந்த பல் வேறு தெருவின் ....319
இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும்
துறை பிறக்கு ஒழியப் போகி கறை அடிக்
குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும். .....352
என்றவாறு அந்நூற் செய்திகளை அறியலாம்
பாணர்கள் குழுமிப் பயணப்படத் தொடங்கும் இடம் பற்றிய செய்தி நூலில் இல்லை. சென்றடையும் இடமே தொண்டை நாட்டின் தலைநகரான கச்சி எனப்படும் காஞ்சி. செல்லும் வழியில் உப்பளங்கள் விவரிக்கப்படவில்லை. ஆயினும், உப்பு வணிகம் செய்யும் உமணர்கள் விவரிக்கப்படுகின்றனர். உப்புவிளையும்அளங்களுக்கேதுவாய் அமையக்கூடிய கழிமுனைகள் பேசப்படவில்லை. மாறாக, படப்பையெனும் மருதநிலத்தோடு கூடிய நெய்தல் நிலம் இங்கு இயல்பாகப் பேசப்படுகிறது; வருணிக்கப்படுகிறது. எயிற்பட்டினம் என்று சங்ககாலத்தில் வழங்கப்பட்ட பேரளங்கள் கொண்ட இன்றைய மரக்காணம் பாடப்படவில்லை. ஆனால் கலங்கரை விளக்கும் மணல் மலிந்திருந்த மீனவக் குடிகள் வாழும் தெருக்களும் போக்குவரத்துமாயுள்ள நாவாய்களும் இருப்பதாகப் பாடப்பட்ட நீர்ப்பெயற்று என்று வழங்கப்பட்ட அன்றைய துறைமுக நகரம் இன்றுள்ள மாமல்லபுரமேதான் எனத் துணிவதற்கு.
அண்மையில் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (National Institute of Ocean Technology) ஆல் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆய்வும்
ஒன்றல் செல்லா உரவு வாள் தடக் கை,
கொண்டி உண்டி, தொண்டையோர் மருக!
மள்ளர் மள்ள! மறவர் மறவ!
செல்வர் செல்வ! செரு மேம்படுந!
வண் திரைப் பரப்பின்ஒன்றல் ....458
எனும் வரிகளும் துணை நிற்கின்றன.
கரிகால் பெருவளத்தான் வழிவந்த சோழன் இளந்திரையனால் சங்ககாலத்தில் ஆளப்பட்ட இத்தமிழ்மா நகரான நீர்ப்பெயற்று துறைமுகம், சங்கம் மருவிய பல்லவர் காலத்தில் மாமல்லை, கடல்மல்லை, மஹாபலிபுரம், நகரமான மாமல்லபுரம் (நந்திவர்மனின் கல்வெட்டு) எனவும், பின்வந்த சோழர் காலத்தில் மாமல்லபுரமான நகரம் (சோழர் காலக் கல்வெட்டு) ஜனநாதபுரம் எனவும் வழங்கப்பட்டு, இன்று மகாபலிபுரம், மாவலிபுரம், மகாபஸ் என அழைக்கபடுகிறது.
பல்லவர்கள்?
பீலமதனில் புக்குத்தன் பேரொளியால் நாகர் குல மகளைக் கைப்பிடித்த கோவும்
....விக்கிரம சோழன் உலா
பணம் புணர்ந்த மோலியான் கோமகளைப் பண்டு மணம் புணர்ந்த கிள்ளிவளவன்
....குலோத்துங்க சோழன் உலா
கரிகாலன் வழிவந்த கிள்ளிவளவன், பிலத்துவாரத்தின் வழி சென்று நாகலோகம் என்று வழங்கப்படும் இன்றைய இலங்கையின் மணிபல்லவத் தீவின் நாகர் குல இளவரசி பீலிவளையை மணந்து, தங்களுக்குப் பிறந்த குழந்தையைக் கடல்வழிப் பயணத்தில் தொலைத்திட, அக்குழந்தை கடலே அரணாக வந்து சேர்ந்த இடம் தொண்டைநாடு. திரைகளால் அலைக்கப்பட்டு வந்தமையால் அவன் இளந்திரையன் எனப்பட்டன. அவனை முதல்வனாகக் கொண்ட மரபு தொண்டையர் மரபு; ஆண்ட நாடு தொண்டைநாடு. அவன் வழிவந்தவர்கள் பல்லவர்கள் என்பது அறிஞர்கள் சிலரின் கருத்து.
மதனி என்னும் தேவமகள் பூவுலகின் அழகைக் காண, தன் தோழியுடன் வந்திருக்க, பரத்வாஜ முனிவர் குலவழியில் தோன்றிய துரோணனின் மைந்தனான அசுவத்தாமனின் உருவழகைக் கண்டு மயங்கி, அன்பு வாழ்க்கை நடத்திப் பெற்ற மகவைத் தளிர்களாலான படுக்கையில் ஏந்தி, தளிர்களின் சொற்பொருள் படுமாறு 'பல்லவன்' எனத் தன் குழந்தைக்கு அசுவத்தாமன் பெயரிட்டு அழைத்ததாக, நெல்லூர் மாவட்டம் அமராவதி என்ற இடத்தில் கிடைத்த சிம்மவர்மன் காலத்திய கல்வெட்டுக் கூறுவதாக வேறு சிலர் நிறுவுகின்றனர்.
இப்படியாக, வடஇந்தியாவிலிருந்த பஹ்லவர்களே பல்லவர்கள் என்று ஒரு சாராரும், மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்களே பல்லவர்கள் என்று மற்றொரு சாராரும், தொண்டைப் பகுதிக்கு சாதவாகனர்களின் பிரதிநிதியாக வந்து, இங்கேயே தனியாட்சி அமைத்து ஆண்டவர்கள் பல்லவர்கள் என்று வேறொரு சாராரும் தங்கள் கருத்தினை முன்வைக்கின்றனர்.
இவ்வாறான வெவ்வேறு நிலைப்பாடுகளுக்கிடையில்தான் பல்லவர்கள் யார்? அவர்தம் இறையியல் யாது? அரசியல் வகுத்த அவர்களின் மெய்நெறி என்ன? சமணத்தை விடுத்துச் சைவம் தழுவிய முதலாம் மகேந்திரவர்மனின் கொள்கைதான் என்ன? ஏன் 'ஈசுவரனுக்கு முருகன் போல, தந்தை பரமேச்சுரனுக்கு இவன் அவதரித்தான்' என்று தன்னை கல்லில் வெட்டவுரைத்தான் இரண்டாம் நரசிம்மன்? 'அகில திக் விஜயார்ஜித யசாக்' எனச் சமஸ்கிருதத்தில் தொடங்கிய சிம்மவர்மன் கால மெய்க்கீர்த்தி மரபு, 'தெள்ளாற்றெறிந்த நந்திப் போத்தரையர்' என்று மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் தமிழாகுவதற்குக் காரணம் யாது?
எனும் கேள்விகளுக்கு வரலாறு தன் வழி ஆராயாது, கலைத் துணையாற் பல்லவர்களை அடையாளம் காணுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பல்லவக் குடைவரைகள் – பொது அமைப்பு
மாமல்லபுரம் எனும் பெயர் பெரும் முன்னால், பல்லவம் அங்கு தோற்றுவிக்கப்படுவதற்கு முன்னால், படிமங்களின் தாயகம் எனப் போற்றப்படுவதற்கு முன்னால், இது வெறும் தொகை தொகையாகப் பாறைகள் மண்டியிருந்த இடம் தான்.
கடல்கோளால் மூழ்குண்ட உலகை, உயிர்களின் மலங்குற்றங்கள் நீங்க, பிறவியுய்த்து பேறடைய வேண்டுமென வராக அவதாரம் தரித்த திருமால் மீட்டெடுத்த யுகத்தில் தோன்றினவோ என வியப்பூட்டும் இக்கற்கள், பல்லவர் காலத்திற்கு முன்புவரை தான் தோன்றிய இடம் மாறாது, கொண்ட வடிவம் சிதையாது, அவ்விடத்தே அவ்வண்ணமே ஓரிக்கிடந்தன என்பது இயற்கைதான். பல்லூழி பிழைத்திருந்த இப்பாறைகள், பல்லவ உளியால் பழுது நீங்கப் பெற்று கலையானதும் இயற்கைதான்.
கேள்வி என்னவென்றால், திண் கல்லில் சிலை கண்ட பல்லவன் தன் செய்வினையில் செந்நெறி கண்டானா? பாறைகள் அமைந்த நிலவியலுக்கேற்ப சாத்திரத்தை வளைத்தானா? அல்லது கோயிலின் அமைதிக்கேற்ப குடையும் முறைமையை வகுத்துக்கொண்டானா?
குடைவரைக் கோயில்கள் சிகரத்துடனான கும்பத்தைக் கொண்டிருப்பதில்லை எனலாம். குடைவரைக் கோயில் என்றாலே மலையைக் குடைந்து அமைக்கப்படுவது என்பது அதன் சொற்பபொருளிலிருந்து கிடைக்கும் விளக்கம். மலைகள் மட்டுமல்லாமல், குன்றுகளும் பாறைகளும் கூட குடைவரைக் கோயில்களாக்கப்படுவது வழக்கம்தான். சொல்லப்படாத இலக்கணமாக, குடைவரைகளில் சிகரம், கும்பம், பிரத்தரம் முதலிய அங்கங்களைப் பொதுவழக்காகச் செதுக்காததற்குப் பாறை போன்ற சிறு அமைவுகளில் போதிய இடம் இல்லாதமையும், அளவில் பெரிய மலையாயின் அதன் புறச்சாய்வுக் கோணத்தில் பாங்கில்லாதமையும் காரணங்களாகக் கருதிட இடமுண்டு. மாமல்லபுரத்தின் மும்மூர்த்திக் கோயில், வராகக் கோயில் போன்ற சில குடைவரைக் கோயில்கள் இவ்வழக்கத்திற்கு விலக்காக அமைவது, குடையப்படும் அமைவினையும், குடையச் செய்வித்தவரையும் பொறுத்ததே என கருதலாம்.
மாற்றாக, குன்றன்ன கோயில்களோ, ஒற்றைக்கல் அமைவிலுள்ள குன்றையோ பாறையையோ முழுமுதற் பொருளாகக் கொண்டு, உபபீடம் தொடங்கி கும்பம் வரையிலான உறுப்புகளை ஒருபக்கம் தோரணமாக மட்டும் புடைக்காது, நிறையான பயன்பாடும் அழகியலும் ஒருசேர எல்லாப் பக்கங்களிலும் அமையுமாறு வடிக்கும் முழுச்சூல் முறைமையாகும். இவ்வாறான கோயில்களுக்கு, கழுகுமலை வெட்டுவான் கோயிலும் மாமல்லையின் ஐந்துரதங்களும் சிறந்த சான்றுகளாகும்.
ஆனால், ஒருபக்கத் தோரணமாக அமைந்த குடைவரைக் கோயில்களை “முழுமை” என்று கூற அவற்றின் அமைப்பியலே இடம் தராது எனலாம். ஏனெனில், அதன் அங்கங்கள் யாவும் ஒருபக்கப் புடைப்புகளே அன்றி, முழுப்பக்க வடிவங்களாக இல்லாததுதான், அவ்வாறு நாம் துணிவதற்குக் காரணமாகவுள்ளது.
மேற்கண்டவாரான நிலையில், செந்நூல்கள் உரைத்த உருவ அமைதியை பல்லவர்களின் குடைவரைகள் எட்டினவா? ஒருபக்க உருவைக் கொண்டு இவை சாத்திர உத்தமத்தை உடையவை என்று கூறலாமா? என்பனவாக ஆராய இடம் உண்டா என்றால், இடமுண்டு.
கருவறையை நேரிடையாக அணுகுவதுபோல் குடைந்த கோயில்கள் இடங்கொடுப்பதில்லை. ஆனால், கருவறையைப் பாறையின் விளிம்பிலிருந்து சற்று உள்ளே வைத்து, அதற்கு முன் தூண்களாலான அர்த்தமண்டபத்தைப் பாறையின் விளிம்புவரை கொண்டுள்ள கோயில்கள் அதற்கு இடம் கொடுக்கும் எனலாம். ஏனெனில், இயற்கையான பாறையோடு இணையில்லாது நடுவத்தில் நிலைபெற்றிருக்கும் எல்லா வடிவங்களும், செந்நூல் நெறியை எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஒப்பிட்டு ஆராய ஏதுவாக இருப்பதால்தான் என கருதலாம்.
அவ்வாறாக அமைந்த வராக மண்டபத்தின் முன்புற நடுவத்தில் நிற்கும் இரு முழுச் சிம்மத் தூண்களே பல்லவர்களின் கலையாளுமையை ஆராய நாம் எடுத்திருக்கும் கருப்பொருள்.
வராக மண்டபம்
தலசயனப் பெருமாள் ஆலயத்திற்குப் பின்புறமாக அமைந்துள்ள குடைவரை வளாகத்திற்குள் நுழைகையில், இடது பக்கமாகப் புலப்படும் கணேச குடைவரைக் கோயிலுக்குச் சற்றுத் தெற்கே, ஏற்றுப்பாதையில் நடந்துசெல்கையில் இடதுபுறம் கிழக்குத் திசை நோக்கியவாறு, தனி இரு சிம்மத் தூண்கள் வாயில் அணியாக நிற்குமாறு குடையப்பட்ட ஒற்றைக்கல் கோயில்தான் வராகக் கோயில். இதனைஆக்கப்பட்ட செய்முறையால் வராகக் குடைவரை என்றும், அதன் அர்த்த மண்டப அமைப்பியலால் வராக மண்டபம் என்றும் வழங்குவர்.
முன்புறமாக இரண்டு தனிச் சிம்மத் தூண்கள். அமர்ந்த நிலையில், பின்புற இரு கால்களையும் மடித்துத் தரையில் வைத்து, முன்புற இரு கால்களையும் தரையில் ஊன்றி, நேராக நிறுத்தி, வளைந்த முதுகுடன், கருக்காலான புருவப் பிடரியோடு, நேர்கொண்ட பார்வையில் அமைந்த சிம்மத் தூண்கள். பாறையின் இரு பக்கங்களிலும் அதே வகையான தூண்கள் பாறையிலிருந்து புடைத்த வண்ணம் உள்ளன. சற்று உள்ளே, மண்டபத்தின் மையமாக, வாயிற்காவலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருவறை. கருவறையின் உள்ளே ஒற்றைக் கல் சிலையோ, நிறுவப்பட்ட சிலையோ ஏதுமின்றி வெற்றிடம். கருவறைக்குப் புறத்தே, மண்டபச் சுவர்களில் திருமாலின் வராக அவதாரமும் திரிவிக்கிரம அவதாரமும் அவற்றின் புராணங்களும் முறையே விளக்கப் படிமங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.
சிம்மத் தூண் – முப்பரிமாண அளவை ஆவணம்
நில அளவையியலும் புவிசார் கனவடிவியலும் எனப்படும் கட்டுமானப் பொறியியலின் கிளையாக வளர்ந்து வரும் இப்பொறியியல் பிரிவானது, கன உருவங்களுக்கிடையேயானதாகவோ உருவங்களுக்குள்ளானதாகவோ உள்ள நீளச் சார்பியலை முப்பரிமாண முறையில் பதிவு செய்து, தேவைக்கு ஏற்ப பயன்பெறும் வகையில் கொள்கைகளையும் தொழில்நுட்பங்களையும் வகுத்துக் கொண்டு வருகிறது. அதன் வழியேதான் வராக மண்டப வாயிலிலுள்ள சிம்மத் தூண்கள் போட்டோகிராமெட்ரி (Photogrammetry) என்னும் நுட்பத்தின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் இங்கே ஆய்வுப் பொருளாகிறது.
தூண், தறி, கால், கம்பம், பாதம் என்பனவெல்லாம் கருவறை, மண்டபம், கோபுரத்தின் அதிட்டானத்திற்கும் பிரத்தரத்திற்கும் இடையிலான உறுப்பைக் குறிக்கும் சொற்களாகும். தூண்களை நிறுத்தும் முறைமையைப் பாதவர்க்கம் எனச் சாத்திர நூல்கள் இயம்புகின்றன.
தூணின் உயரமும் அகலமும் :
தூணின் உயரத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். அவற்றில் கீழே உள்ள இரண்டு பகுதிகளைத் தள்ளிவிட்டு, மேல் பகுதியை இருபத்திரண்டு பாகங்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். இந்த இருபத்திரண்டு பாகங்களும் முறையே ஒன்பது உறுப்புகளுள் அடக்கம். அவை மேலிருந்து கீழாகப் போதிகை, வீரகண்டம், பலகை, கண்டம், குடம், கண்டம், ஆஸ்யம், பத்மம், விருத்தம்.
(ஆலய நிர்மாண பிம்ப லக்ஷண சிற்பநூல்)
மேற்கண்ட இலக்கணத்தை இங்கு ஆவணமாக்கிய சிம்மத் தூணோடு பொருத்தி, அதன் பாகங்களை விதிப்படி வரைவு செய்து, திட்ட வரைபடமாக மீளுருவாக்கிய வரைபடம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
தூணின் கீழ் ஒதுக்கப்பட்ட இரு பெரும் பகுதிகளிலும் கலசம், இடைக்கட்டு, வன்னிமாலை, வேதிகை எனும் உறுப்புகள் பிரிக்கும் வழக்கமிருந்தாலும், அப்பிரிப்பு முறை இத்தூணில் முழுமையாகக் கையாளப்படாதது, அதற்கான போதிய சாத்திரச் சான்றுகள் கிடைக்காததாலே ஆகும். எனவே, அவை இங்கு விளக்கப்படவில்லை
பெருந்தச்சசு மரபில், நீளத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்ட அளவுக்கோல், தச்சுக்கோல் எனப்படும். அணுவின் கூட்டாகத் தொகுக்கப்படும் அளவுகள் முறையே வீதமாக வளர்ச்சி பெற்று, எட்டு நெற்களின் அகலம் கொண்டது ஒரு விரலளவு என விதிக்கிறது. அவ்விரலளவே ‘அங்குலம்’ எனவும் வழங்கப்பட்டது. இது ஓன்றே மூன்று அரைகால் பிரிட்டிஷ் அங்குலத்திற்கு நிகரானது.
1” Thatchukoal inch = 1 3/8” British inch
விரல் அளவு இருபத்துநான்கு மடங்காயின், அது ஒரு தச்சுமுழம். இந்தத் முழக்கோலில் அடங்கும் அங்குல எண்ணிக்கையானது, அதனைப் பயிலும் தச்சர்களுக்கு ஏற்பவும் கட்டுமானத்தை நிர்மாணிக்கும் தர்மகர்த்தாவிற்கு ஏற்பவும் கோயில் எழுப்பப்படும் மூலவருக்கு ஏற்பவும் கோயில் எழுப்பப்படும் இடத்திற்கு ஏற்பவும் மாறுபாடு கொள்ளும். அதனை விவரிப்பது நாம் எடுத்துக்கொண்ட தலைப்பின் வரம்பிற்கு உட்படாததாலும், இத்தூணைப் பதிவு செய்ய நாம் பயன்படுத்திய தொழில்நுட்பத்தின் அளவுக்கோல் மெட்ரிக் (சென்டிமீடர்-cm) முறை என்பதாலும், மரபு அளவியலின் வாய்பாடும் அதன் கணக்கியலும் இங்கு விளக்கப்படவில்லை.
தூணின் உயரத்தை ஏழு பாகம், எட்டு பாகம், ஒன்பது பாகம், பத்து பாகம், பதினோரு பாகம், பன்னிரண்டு பாகம் எனச் செய்துகொண்டால், அவற்றில் ஒரு பாகமானது தூணின் மூலத்தின் (அடித்தூணின்) அகலமாகும். தூணின் அடியின் அகலமானது இவ்விதம் கூறப்பட்டிருக்கிறது.
(காசியப சிற்ப சாத்திரம்)
பிரதி (அதிஷ்டானத்தின் மேல்மட்டம்) முதல் உத்தரத்தின் கீழ்மட்டம் வரை உள்ள தூணின் உயரம் – 316.0
இங்கே, தூணின் மூல அகலமான அடிக்கால் அகலத்தைக் கணக்கிடுவதில் அதன் கீழ்மட்ட உறுப்பான பீடத்தின் பத்மம் வருகங்களால் ஏற்படும் தெளிவின்மையைத் தவிர்க்க, தூணின் மேல்மட்ட நுனியின் அகலமான தலைக்கால் அகலத்தை அளந்து, அவ்வளவிலிருந்து அடிக்கால் அகலத்தை வருவிக்கும் முறை கையாளப்படுகிறது. அம்முறைக்கு ஏதுவாய் பயன்படுத்தப்படும் அடுத்த விதி,
அந்தத் தூணின் அக்ரபாதத்தின் (தலைக்கால்) அகலமானது, அதோபாதத்தின் (அடிக்கால்) அகலத்தில் பன்னிரண்டில் ஒரு பாகம் முதல், ஆறில் ஒரு பாகம் வரையில் குறைவாக இருப்பதாகும்.
(மயமதம்)
தூணின் தலைக்கால் அகலம் வீரகண்ட உறுப்பில் அளக்கப்பட்டது- 32.0
தூணின் தலைக்கால் அகலத்தை, குட உறுப்பிற்கு மேல் இருக்கும் கண்டத்திலும் அளக்கும் வழக்கம் நடைமுறையில் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நாம் எடுத்துக்கொண்ட இந்தத் தூணில். வீரகண்ட அகலமும் குடத்தின் மேல்கண்ட அகலமும் ஏறத்தாழச் சமமே.
தூணின் இந்தத் தலைக்கால் அகலத்தை மாறிலியாக வைத்துக்கொண்டு, மேற்கண்ட மயமத விதியின்படி இத்தலைக்கால் அகலத்தை முறையே பதினொறு பாகத்திலிருந்து ஐந்துபாகம் வரை வகுத்திடக் கிடைக்கும் ஒரு பாகத்தின் அளவைக் கொண்டு தூணின் அடிக்கால் அகலமாகக் கணிக்க ஏழு வாய்ப்புகளை பெறலாம். இதனைக் கீழுள்ள அட்டவணை-1 விளக்குகிறது.
அட்டவணை 1
| அளவீடு | மதிப்பு 1 | மதிப்பு 2 | மதிப்பு 3 | மதிப்பு 4 | மதிப்பு 5 | மதிப்பு 6 | மதிப்பு 7 |
|---|---|---|---|---|---|---|---|
| தலைக்கால் அகலத்தின் பாக எண்ணிக்கை | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| அளவிட்ட தலைக்கால் அகலத்தை (32.0) மயமத விதியின்படி முறையே அவற்றின் பாகங்களின் எண்ணிக்கையால் வகுத்திடக் கிடைக்கும் ஒரு பாகத்தின் அளவு. | 6.40 | 5.33 | 4.57 | 4.00 | 3.56 | 3.20 | 2.91 |
| நிகரான அடிக்கால் அகலத்தின் பாக எண்ணிக்கை. | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| வகுத்துக் கிடைக்கும் ஒரு பாக அளவை தலைக்கால் அகலத்துடன் கூட்டிக் கிடைப்பது அடிக்கால் அகலம். | 38.40 | 37.33 | 36.57 | 36.00 | 35.56 | 35.20 | 34.91 |
தூணின் உயரத்தை ஏழு பாகம், எட்டு பாகம், ஒன்பது பாகம், பத்து பாகம், பதினோரு பாகம், பன்னிரண்டு பாகம் எனச் செய்துகொண்டால், அவற்றில் ஒரு பாகமானது தூணின் மூலத்தின், (அடித்தூணின்) அகலமாகும். தூணின் அடியின் அகலமானது இவ்விதம் கூறப்பட்டிருக்கிறது.
(காசியப சிற்ப சாத்திரம்)
தூணின் அளக்கப்பட்ட உயரமான 316 சென்டிமீட்டரை, அடிக்கால் அகலமான 35.20 சென்டிமீட்டரால் வகுத்திட, கிடைக்கும் முழு எண்ணான ஒன்பது பாகங்களே, மேற்காணும் காசியப விதியின்படி தூணை ஒன்பது சம பாகங்களாகப் பிரித்து, அதில் ஒரு பாகத்தை அடிக்கால் அகலமாக நிர்ணயம் செய்வதுடன் பொருந்துகிறது. ஆகவே, 35.20 செ.மீ. இங்கு அடிக்கால் அகலமாகக் கொள்ளப்படுகிறது. இதனைக் கீழுள்ள அட்டவணை-2 விளக்குகிறது.
அட்டவணை 2
| வகுத்துக் கிடைக்கும் தனிப் பாகத்தைத் தலைக்கால் அகலத்துடன் கூட்டிக் கிடைப்பது அடிக்கால் அகலம். | 38.40 | 37.33 | 36.57 | 36.00 | 35.56 | 35.20 | 34.91 |
|---|---|---|---|---|---|---|---|
| தூணின் அளக்கப்பட்ட உயரத்தை (316.0) பெறப்பட்ட அடிக்கால் அகலத்தால் வகுத்திடக் கிடைக்கும் பாக எண் | 8.2 | 8.5 | 8.6 | 8.8 | 8.9 | 9.0 | 9.1 |
தூணின் உறுப்புகள் :
அழகிய தோற்றத்தைக் கொடுப்பதற்காகவும், தூண் எளிதில் சாய்ந்துவிடாமல் இருப்பதற்காகவும், அடிப்பகுதியைச் சமமாக்கி, அடியிலிருந்து மேலே செல்லச் செல்ல நுனி அகலம் சிறிது குறைந்து, கரைவாகச் செல்லும். இதனைக் காலின் கரைமானம் எனக் கூறுவர் சிற்பிகள்.
(மரபுக் கட்டடக்கலை)
தூணானது அடி முதல் நுனி வரையில் சதுரச் சரமாக இருக்க வேண்டும். கும்பம், மந்தம் (மண்டி) முதலியவை உடன் இருக்க வேண்டும். இவ்விதமாக இருந்தால் இதற்கு பிரம்மகாந்தம் என்று பெயர். இதுவே எண்சரமாக இருந்தால் அதற்கு விஷ்ணுகாந்தம் என்று பெயர்.
(காசியப சிற்ப சாத்திரம்)
தூணின் அடியில் யாளி, யானை, சிங்கம், பூதங்கள் ஆகிய உருவங்களுடன் கூடியதாகவும், விருப்பமான உருவத்துடன் கூடியதாகவும் இருந்தால், அந்தந்த உருவங்களுக்கு ஏற்பப் பெயராகும்.
(மயமதம்)
ஆய்வுப் பொருளாக இங்கு எடுத்துக்கொண்ட தூணின் வகைமைக்குப் பொருந்துமாறு உள்ள விதிகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, இந்தத் தூணை விஷ்ணுகாந்தத் தூண் எனவும் சிம்மத் தூண் எனவும் அழைப்பது இலக்கணப்படி சரியானதாகும். மேலும், விதிக்கப்பட்ட கரைமானமானது எல்லாத் தூண்களிலும் காணக்கிடைகாதது, அதனை செய்விக்கும் அறங்காவலரையோ பெருந்தச்சரையோ பொறுத்து அமையலாம். இதனை ஓர் அழகியல் கூறாகவே கொள்ளலாம்.
தூணின் உயரத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். அவற்றில் கீழே உள்ள இரண்டு பகுதிகளைத் தள்ளிவிட்டு, மேல் பகுதியை இருபத்திரண்டு பாகங்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். இந்த இருபத்திரண்டு பாகங்களும் முறையே ஒன்பது உறுப்புகளுள் அடக்கம்.
(ஆலய நிர்மாண பிம்ப லக்ஷண சிற்பநூல்)
தூணின் அளக்கப்பட்ட மொத்த உயரம், பிரதியின் மேல்மட்டத்திலிருந்து உத்திரத்தின் அடிமட்டம் வரை – 316.0
விதியின்படி தூணை மூன்று பகுதிகளாகப் பிரித்திட, ஒரு பகுதியின் அளவு – 105.3
மேல் பகுதியினுள் ஒன்பது உறுப்புகள் அடங்கும். இந்த ஒன்பது உறுப்புகளும் இருபத்திரண்டு பாகங்களாகப் பிரிக்கப்படும்போது கிடைக்கும் ஒரு பாகத்தின் அளவு – 4.8
ஆகவே, 4.8 என்பது தனியீரலகாக இங்கு கருதப்பட்டு கீழ் காணும் அட்டவணை-3 யில் தொகுக்கப்படுகிறது.
அட்டவணை 3
| எண் | உறுப்பு | பாகம் | விதிப்படியான அளவை (செ.மீ.) | அளக்கப்பட்ட அளவை (செ.மீ.) | வேறுபாடு (செ.மீ.) |
|---|---|---|---|---|---|
| 1 | போதிகை | 4 | 19.2 | 19.7 | -0.5 |
| 2 | வீரகண்டம் | 4 | 19.2 | 19.3 | -0.1 |
| 3 | பலகை | 5 | 24 | 24 | 0 |
| 4 | கண்டம் | 1 | 4.8 | 4.7 | 0.1 |
| 5 | குடம் | 4 | 19.2 | 22.2 | -3 |
| 6 | கண்டம் | 1 | 4.8 | 3.8 | 1 |
| 7 | ஆசியம் | 1 | 4.8 | 3.7 | 1.1 |
| 8 | பத்மம் | 1 | 4.8 | 3.3 | 1.5 |
| 9 | விருத்தம் | 1 | 4.8 | 5.1 | -0.3 |
| மொத்தம் | 22 | 105.3 | 105.8 | -0.5 | |
- விதிப்படியான அளவை (செ.மீ.): பெறப்பட்ட 4.8 அலகைக் கொண்டு, விதிப்படியான பாக எண்ணிக்கைகளோடு பெருக்கிடக் கிடைக்கும் உறுப்புகளின் திட்ட அளவு.
- அளக்கப்பட்ட அளவை (செ.மீ.): பதிவு செய்யப்பட்ட தூணின் உறுப்புகளை அளந்திட கிடைக்கும் நடப்பு அளவு.
- வேறுபாடு (செ.மீ.): திட்டமிட்ட அளவிற்கும் செதுக்கப்பட்ட அளவிற்கும் இடையிலான வேறுபாடு.
வர்க்கங்களின் அமைதி :
தூணின் உச்சியின் அகலத்திற்கு தண்டம் என்று பெயர் கூறப்படுகிறது. ஹர்மியங்களின் (வீடுகளின்) அல்லது மாடிக் கட்டிடங்களின் சகல அங்கங்களையும் தண்டமானத்தினால் அளக்க வேண்டும்.
(மயமதம்)
மேற்கண்ட சூத்திரத்தின்படி, தூணின் தலைக்கால் அகலமே தண்டம் எனப்படுகிறது. வீரகண்ட உறுப்பில் அளக்கப்பட்ட தூணின் அகலமானது 32 சென்டிமீட்டர். இதுவே இத்தூணின் தண்ட அலகாகக் கொள்ளப்படுகிறது.
நடைமுறையில் தச்சர்களிடையே தண்டமானத்தில் வழங்கப்படும் களத்தியின் வாய்ப்பாடு கீழே உள்ள அட்டவணை- 4 இல் கொடுக்கப்பட்டுள்ளது.
களத்தி எனப்படுவது, தூணின் உறுப்புகளானது கால் அகல ஒழுங்கிலிருந்தான வெளிப்புறத் துறுத்தலையும் உள்புற அடக்கத்தயும் குறிக்கும் அளவுமானமாகும்.
அட்டவணை 4
| எண் | உறுப்பு | களத்தி (தண்டம்) | விதிப்படியான அளவை (செ.மீ.) | அளக்கப்பட்ட அளவை (செ.மீ.) | வேறுபாடு (செ.மீ.) |
|---|---|---|---|---|---|
| 1 | போதிகை | 1 | 32 | 52.05 | -20.05 |
| 2 | வீரகண்டம் | காலில் அடக்கம் (கால் ஒழுங்கு) | |||
| 3 | பலகை | 1 | 32 | 29.95 | 2.05 |
| 4 | கண்டம் | காலில் அடக்கம் (கால் ஒழுங்கு) | |||
| 5 | குடம் | 0.5 | 16 | 15.65 | 0.35 |
| 6 | கண்டம் | காலில் அடக்கம் (கால் ஒழுங்கு) | |||
| 7 | ஆசியம் | பலகையின் பத்ம மடல் ஒழுங்கிலிருந்து விருத்தம் வரை கரைமான ஒழுங்காக அமையும். | |||
| 8 | பத்மம் | ||||
| 9 | விருத்தம் | ||||
மீச்சிறிய அளவு என ஒதுக்கப்பட முடியாத வேறுபாடாக போதிகையின் விதிப்படியான திட்ட அளவிற்கும் களத்தில் செதுக்கப்பட்டுள்ள நடப்பு அளவிற்கும் இடையிலான வேறுபாடு உள்ளது. தூணில், விதிக்கப்பட்ட அளவைவிடச் சுமார் இருபது சென்டிமீட்டர் அதிகமாக உள்ளது. ஒரு தண்டக் களத்தியாக இருக்க வேண்டிய போதிகையின் தரங்கவர்க்கம், சுமார் ஒன்றே முந்நாலுமா மடங்கு அல்லது 1.6 மடங்கு அதிகமாக உள்ளது.
இது நடைமுறையில் வழங்கப்படும் களத்திமானத்திற்கு பொருந்தவில்லையாயினும், ஆலய நிர்மாண பிம்ப லக்ஷண சிற்பநூலின்படி, போதிகையின் முழு நீளத்தைத் தூணிண் தண்டத்தால் எவ்வாறு அளப்பது என்னும் சூத்திரம் இங்கே கவனிக்கத்தக்கதாய் அமைகிறது.
போதிகையின் உயரமும் நீளமும் :
ஐந்து தண்டம் நீளம் இருப்பது உத்தம போதிகை ஆகும். நான்கு தண்டம் இருப்பது மத்தியம போதிகை ஆகும். மூன்று தண்டம் இருப்பது அதம போதிகை ஆகும். தரங்கு போதிகை எனவும், கழுத்து போதிகை எனவும் இரண்டு விதம் போதிகை ஆகும்.
இதன்படி, ஒரு தண்டமானது- 32.0
போதிகையின் அளக்கப்பட்ட மொத்த நீளமென்பது, இருபக்கக் களத்திகளையும் நடுப்பக்கத் தலைக்கால் அகலத்தையும் சேர்த்து- 52.6 + 32.0 + 51.5 = 136.1
பெறப்படும் செதுக்கப்பட்ட போதிகையின் நடப்பு அளவான 136.1 ஆனது, தூண் தண்டத்தின் நாலேகால் 4.25 மடங்காகும். சொல்லப்பட்ட மத்தியம போதிகை விதியினும் கால் மடங்கு அதிகமாக இருப்பதால் வரும் வேறுபாடும் இங்கு பதிவு செய்யப்படுகிறது.
மூலபாதத்தினுடைய அடிப்பாத அகலம், மத்தியபாத அகலம், மேற்பாத அகலம் ஆக மூன்று விதமாக, போதிகை உயரம் மூன்று விதம்.
(ஆலய நிர்மாண பிம்ப லக்ஷண சிற்பநூல்)
இதன்படி, அளக்கப்பட்ட தூணின் அடிப்பாத அடிக்கால் அகலம்- 35.20
தூணின் மேல்பாத தலைக்கால் அகலம்- 32.0
சிற்பநூல்களின்படி, போதிகை என்பது தூணின் வீரகண்டத்திற்கும், பிரத்திரத்தின் உத்தரத்திற்கும் இடையில் இருக்கும் உறுப்பாகும். எடுத்துக்கொண்ட இந்த வகைத் தரங்கப் போதிகை, வீரகண்டத்தின் மேல்மட்டத்திலிருந்து அலைவடிவத்தில், கால் ஒழுங்கிலிருந்து இருபுறத்திலும் களத்திப் பெற, அதன் முழு நீளத்தை அடைந்த பிறகு, செங்குத்தாக மேலெழுந்து உத்தரத்துடன் சேருவதுதான் இவ்வகைப் போதிகையிலிருக்கும் பொதுப் பாங்கு. தரங்கம் என்றாலே அலைதான். அவ்வலை வடிவம் முடிவுற்ற பிறகு, மேல் எழும் பாகம் போதிகையின் அங்கமாகவே அடையாளப்படுத்தப்படுகிறது. இதனைப் படம் விளக்குகிறது.
ஆனால், நாம் எடுத்துக்கொண்ட தூணிலோ, போதிகையில் மேல்பாகம் இல்லாமல், தரங்க பாகமானது நேரடியாகப் பிரஸ்தரத்தின் கீழ்வுறுப்பான உத்தரத்தின் அடிமட்டத்துடன் சேர்வது படத்தால் தெரிய வருகிறது. தரங்கப் பாகம் இணையும் உறுப்பானது உத்தரம் என நாம் துணிவதற்கு, அவ்வுத்தரத்தின் மேலுள்ள கம்பு, எழுதகம், வாஜனம் ஆகிய வருகங்கலே காரணமாகும்.
ஆகவே, போதிகையின் உயரமானது வீரகண்டத்தின் மேல்மட்டத்திலிருந்து உத்தரத்தின் அடிமட்டம் வரை அளக்கப்பட்டது- 19.70
இவ்வுயரமே மேற்கண்ட விதியுடன் பொருந்தி, போதிகை முதல் விருத்தம் ஈறாக உள்ள பாக விகிதங்களுடன் ஒத்துப்போவதைக் அட்டவணை 3-இன் வழியாக அறிய முடிகிறது.
அவ்வாறிருப்பினும், போதிகையின் உயரமானது தூணின் அடிப்பாத அகலம், மத்திய பாத அகலம் அல்லது மேற்பாத அகலம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றுக்குச் சமமாக இருக்க வேண்டும் என்னும் ஆலய நிர்மாண பிம்ப லக்ஷண சிற்பநூலின் விதி, இங்கு தவறுவதும் குறிப்பிடத்தக்கது.
மாறாக, போதிகையின் தரங்கப் பகுதி உத்தரத்தில் சேரவில்லை. அதன் மேலுள்ள பகுதியும் போதிகையின் ஓர் அங்கம்தான்எனக்கொண்டால், போதிகையின் உயரமானது – 36.40 (19.70 + 16.70)
ஆகவே, விதியின்படி ஏறத்தாழ தூணின் மூலப்பாத அகலமே போதிகையின் உயரமாக நிர்ணயிக்கப்பட்டது என்று, தூணின் அடிப்பகுதியை அளந்தும் அட்டவணை-2யில் உள்ள தரவுகளை ஒப்பிட்டும் கூற வாய்ப்புள்ளது.
அவ்வாறு கூறுவோமாயின் போதிகையின் உயரமாக கொள்ளப்பட்ட 36.4 செ.மீ., ஆலய நிர்மாண பிம்ப லக்ஷண சிற்பநூலின் விதி அட்டவணை செய்யும் போதிகை முதல் விருத்தம் ஈறாக உள்ள பாக விகிதங்களுடன் ஒத்துப் போகாததையும் இங்கே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதாயாகின்றது.
தூணின் உயரத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். அவற்றில் கீழே உள்ள இரண்டு பகுதிகளைத் தள்ளிவிட்டு, மேல் பகுதியை இருபத்திரண்டு பாகங்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். இந்த இருபத்திரண்டு பாகங்களும் முறையே ஒன்பது உறுப்புகளுள் அடக்கம்.
எனும் விதியில், போதிகையின் பாக எண்ணிக்கையாகக் கூறப்படும் நான்கு அலகானது, ஏற்றுக்கொள்ளப்பட்ட 36.4 சென்டிமீட்டர் உயரத்துடன் பொருந்தவில்லை என்பதும் கீழுள்ள அட்டவணையில் பதிவு செய்யப்படுகிறது.
| எண் | உறுப்பு | பாகம் | விதிப்படியான அளவை (செ.மீ.) | அளக்கப்பட்ட அளவை (செ.மீ.) | வேறுபாடு (செ.மீ.) |
|---|---|---|---|---|---|
| 1 | போதிகை | 4 | 19.2 | 36.4 | -17.2 |
ஆகவே, இங்கு போதிகை என்பது அதன் தரங்கப் பகுதி மட்டும்தானா? அவ்வாறிருக்குமாயின், தூணின் அகலத்தால் நிர்ணயிக்கப்படும் போதிகை உயர விதியுடன் ஏன் ஏற்றுக்கொள்ளப்பட்ட உயரம் பொருந்தவில்லை?
அல்லது, போதிகை என்பது தரங்கப் பகுதியுடன் அதன் மேற்பகுதியும் சேர்ந்ததுதான் என்றால், அவ்வுயரமானது மற்ற வருக உறுப்புகளுடனான விகிதப் பொருத்தப் பாட்டில் இல்லாதது ஏன்?
இத்தகைய கேள்விகளை முன் வைத்து தூனின் கீழ்பாகமான சிம்மத்தின் உருவ அமைதியை சிற்பச் செந்நூலின் வழி கட்டுரையின் அடுத்த பகுதி ஆராய்கிறது.
சிம்மத்தின் அமைதி :
சிங்கப் படிமத்தை நின்ற நிலை, அமர்ந்த நிலை, கிடந்த நிலை ஆகிய மூன்று நிலைகளில் செய்தல் பெரிதும் வழக்கு. நான்கு கால்களையும் தரையில் ஊன்றி, எழுச்சியாக நிற்கும் நிலையே நின்ற நிலையாகும். பின்னங்கால்களை மடக்கி அமர்ந்து, முன்னங்கால்களைக் கீழே ஊன்றி, தலையை நேராக வைத்து, நேராக நோக்குவதாய் அமைந்திருப்பதே அமர்ந்த நிலையாகும். அங்கனம் இன்றி, முன்கால்களை உயர்த்தி மார்போடு நெருக்கி வைத்து, உடலை முன்னோக்கி வளைத்து, தலையைப் பின்னோக்கி இழுத்து, விழிகளை உருட்டி அமைத்த நிலையிலும் இதனை ஏற்கலாம். இது அமர்ந்த நிலையில் மற்றொரு கோலமாகும். முன் கால்களையும், பின் கால்களையும் பீடத்தில் மடித்தபடி அமைத்து, உடலைச் சிறிது பக்கவாட்டில் சரித்துத் தலையை முன்னோக்கியாகவோ, சாய்ந்து நோக்கிக்கொண்டாகவோ இயற்றுவது கிடந்த நிலை ஆகும்.
(சிற்பச் செந்நூல்)
அட்டவணை 5
| எண் | உடல் அங்கம் | பாக எண்ணிக்கை | நிகரளவு (செ.மீ.) | நடப்பு அளவு (செ.மீ.) | விகிதம் |
|---|---|---|---|---|---|
| 1 | கண்ணின் அகலம் | 1 | 4.8 | 4.8 | 1.0 |
| 2 | மூக்கின் அகலம் | 1 | 4.8 | 4.5 | 0.9 |
| 3 | இரு கண்களின் இடைவெளி | 1 | 4.8 | 4.5 | 0.9 |
| 4 | முகம் | 7 | 33.6 | 39.9 | 8.3 |
| 5 | காதின் அகலம் | 1 | 4.8 | 6.05 | 1.3 |
| 6 | காது மட்டத்தில் முகத்தின் அகலம் | 9 | 43.2 | 32.1 | 6.7 |
| 7 | அதன் கீழ் முகத்தின் முன்புற அகலம் | 5 | 24 | 25 | 5.2 |
| 8 | கால் | 6 | 28.8 | 36.1 | 7.5 |
| 9 | முன்னங்கால் ஒன்றின் நீளம் | 6 | 28.8 | 36.1 | 7.5 |
| 10 | வாலின் கனம் | 1 | 4.8 | 5 | 1.0 |
| 11 | முதுகின் அகலம் | 10 | 48 | 34.8 | 7.3 |
- நிகரளவு (செ.மீ.): கண் அகலத்தை ஓர் அடிப்படை தனியீரலகாகக் கொண்டு பெறப்பட்ட சாத்திரப்படியான திட்ட நிகரளவு.
- நடப்பு அளவு (செ.மீ.): பதிவு செய்யப்பட்ட சிம்மத்தின் உறுப்புகளை அளந்திட கிடைக்கும் நடப்பு அளவு. (ஒர் அங்கத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் அளக்க வாய்ப்பிருந்தால், அவ்வாறே அளந்து, அவ்வளவுகளுக்கான சராசரியே அவ்வங்கத்தின் நடப்பு அளவாகக் கருதப்பட்டுள்ளது)
பெரும்பாலான சாத்திர நூல்கள் சிம்மத்தின் நின்றநிலை கோலத்தையே முதன்மையெனக் கருதி, அதன் உறுப்புகளுக்கான அளவுகளை முன்வைக்கின்றன. சிற்பச் செந்நூலும் அவ்வாறே தரவுகளை நமக்கு அளித்தாலும், சிம்மத்தின் மூவகைக் கோல அமைத்களுக்கும் பொருந்துமாறும் எடுத்துக்கொள்ளப்பட்ட இத்தூணின் சிம்ம அமைதிக்கும் பொருந்துமாறும், செந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள அங்க அளவு விதிகளை மேற்கோலாக கருதி அதற்கு நிகரான பதிவு செய்யப்பட்ட சிம்மத்தின் நடப்பு அளவுகளை முன்வைத்து இரண்டுக்குமான வேறுபாட்டை மேலுள்ள அட்டவணை-5 எடுத்துக்காட்டுகிறது.
முடிவுரை
அறுநூறு ஆண்டுகாலப் பல்லவப் பேராட்சியின் கலைப்பாணியை ஒற்றைத் தூணின் அமைப்பியலால் மதிப்பிடுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. காலம் கடந்து பேசப்பட வேண்டும் என்ற பல்லவர்களின் நோக்கத்திற்கும், 'விசித்திரசித்தன், மாமல்லன், ஆகமப்பிரியன், வாத்தியவித்தியாதரன்' போன்ற பட்டங்களுக்கும் அடிப்படையாக இருந்தது அவர்களின் கலையுணர்வு மட்டுமா அல்லது தொன்றுதொட்டு வழங்கி வந்த நூனெறியா என்றால், இரண்டும்தான்.
கலை என்றாலே ஒழுங்குதான். அவ்வொழுங்கோ, கச்சித ஏற்பாடுகளால் விளைவது. ஏற்பாடுகள் விதிகளால் கட்டமைக்கப்படுவன. வெளியை விதித்து, செய்வினை மேற் பாடுற ஏற்ற விளைவது கலை எனலாம். அத்தகைய வெளியை, நீள அகலத்தை, உயரத் தாழ்வை, ஆர விட்டத்தை நேரிதின் உணர்ந்து, இஃதெனச் சாற்றிட கலையின் மூலத்தை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டுமெனக் கூறினால், அந்தத் தகுதியையும் அழகியலைத் தன்பயன்பாட்டுடன் ஒன்றலப் பொருத்திய பல்லவர்கள் கொண்டிருந்தனர் என்றால் பிழையாகாது. அவ்வாறு செய்யத் தக்கவர்களும் அவர்களே என சான்றுடன் கூறிட, மேற்கொண்ட இந்த ஆய்வைப் போல நெடுங்காலம் பல்லவர்கள் செய்திட்ட ஆக்கங்களை ஆராய்ந்தால், உணர்ந்து கூற முடியுமெனத் தமிழ்க்கலையின் பெயரால் நம்பலாம். அவ்வேட்கையுடனேயே மாமல்லபுரத்தைச் சுற்றி வலசை குழு வலம் வரும்.